வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கர்தினால் Tettamanzi மரணம், திருத்தந்தை இரங்கல் தந்தி

இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் தியோனிஜி தெத்தமான்சி (Dionigi Tettamanzi) அவர்கள், தனது 83வது வயதில், ஆகஸ்ட்,05, இச்சனிக்கிழமை காலையில் காலமானார். கர்தினால் தெத்தமான்சி அவர்களின் இறப்பையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கும், இரங்கல் தந்தி ஒன்றை, அவ்வுயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார். கர்தினால் தெத்தமான்சி அவர்கள், நற்செய்திக்கும், அங்கோனா-ஓசிமோ, ஜெனோவா, மிலான் ஆகிய உயர்மறைமாவட்டங்களுக்கும் மகிழ்வோடு மறைப்பணியாற்றியவர், அருள்பணியாளர்கள் மற்றும் அனைத்து விசுவாசிகளின் தேவைகளுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்திருந்தவர், குடும்பம், திருமண வாழ்வு, அறநெறி வாழ்வு ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தியவர் எனப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும், தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 1934ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, மிலான் உயர்மறைமாவட்டத்தின் ரெனாத்தே என்ற ஊரில் பிறந்த கர்தினால் தெத்தமான்சி அவர்கள், 1957ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், அங்கோனா-ஓசிமோ, ஜெனோவா ஆகிய உயர்மறைமாவட்டங்களில் பேராயராகப் பணியாற்றியபின், 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார். 1998ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் கர்தினால் தெத்தமான்சி. நீண்டகாலமாக நோயுற்றிருந்த கர்தினால் தெத்தமான்சி அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 223 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறியுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-05 21:20:29]


பாசமுள்ள பார்வையில்.. வேதனைகளை உள்ளத்திலே புதைத்த தாய்

அந்தக் கிராமத்து தாய் பண்ணையார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பள்ளிக்கூட வாசனை அறியாதவர். ஆனால் பக்தியும், பண்பும், ஞானமும் நிறைந்தவர். கடின உழைப்பாளி. தனது குடும்பத்தைவிட வசதி குறைந்த, குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தனி ஆளாய், தனது கடின மற்றும், அயராத உழைப்பால், புகுந்த வீட்டை தலைநிமிரச் செய்தார் அந்தத் தாய். வெகு காலமாகப் பயிரிடாமல் தரிசாகக் கிடந்த நிலங்களையெல்லாம் மீண்டும் விளைநிலமாக்கினார். கரம்பிடித்த கணவர், படித்தவராக இருந்தாலும், பண்பில் சிறந்தவர் எனச் சொல்வதற்கில்லை. ஆறு பிள்ளைகளுக்குத் தாயான அவர், தொடர்ந்து முதல் மூன்று பிள்ளைகளையும் இழந்தார். கடைசிக் குழந்தைப் பிறந்ததிலிருந்து, கணவர் கடின நோயால் தாக்கப்பட்டார். தனது சிறு பிள்ளைகளை, உறவினரின் பொறுப்பில் விட்டுவிட்டு, கணவரை, மதுரை, புதுக்கோட்டை என, மாதக்கணக்கில், மாறி மாறி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், அந்தத் தாய், கணவரைக் காப்பாற்றுவதற்கு கடும் முயற்சிகள் எடுத்து, உயிர் பிழைக்கச் செய்தார். சேமித்த பணத்தையெல்லாம் கணவருக்காகச் செலவழித்தார். ஆனால் பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி, வெவ்வேறு நகரங்களில் குடியேறினர். தனது எழுபதாவது வயதில் கணவரை இழந்து, கிராமத்தில் தனியே வாழ்ந்த அந்தத் தாயை, அவரின் இரு மகன்களில் ஒருவர் மட்டுமே, நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிராமத்திற்குச் சென்று பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில், தாயை, தன்னோடு நகரத்திற்கு அழைத்துச் சென்றார் அந்த மகன். ஆனால், அங்குச் சென்ற ஓரிரு மாதங்களிலேயே, மகன் வீட்டில் ஏதோ பிரச்சனை, ஆனால் தாயினால் அல்ல. அதனால் வேறொரு நகரத்திலிருந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு, சில மாதங்களுக்கென தாயை அனுப்பினார் மகன். ஆனால், அங்குச் சென்ற ஒரு மாதத்திலேயே, உறவினர் வீட்டார், அந்த அப்பாவித் தாய்க்கு, இரவு உணவில், நஞ்சு கலந்து கொடுத்து, மூச்சை அடக்கிவிட்டனர். இந்தத் தாய், கணவரால் அனுபவித்த மன வேதனைகள் சொல்லும் தரமன்று. அனைத்தையும், வெளியில் காட்டிக்கொள்ளாமல், பொறுமையோடு அனுபவித்தார். அதிர்ந்து பேசாதவர், புறணிகள் பேசுவதை முற்றிலும் தவிர்த்தவர். தனது குட்டி மகளிடம், அம்மாவுக்கு இவ்வளவு துன்பங்கள் போதாது, இன்னும் துன்பங்கள் வேண்டும், ஆயினும், அம்மாவுக்குப் பொறுமை வேண்டும் என, நீ, கடவுளிடம் கேள் எனச் சொல்வார். மனவலிகள் அத்தனையையும், முணுமுணுக்காமல் பொறுமையோடு ஏற்றவர் இந்தத் தாய். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-05 02:00:31]


அமைதிக்காகச் செபிக்க,ஒன்றிணைந்து உழைக்க திருத்தந்தை அழைப்பு

“இயேசுவின் பெயரில், நம் சான்று வாழ்வு வழியாக, அமைதி இயலக்கூடியதே என்பதை நம்மால் அறியச் செய்ய முடியும்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின. இரண்டாம் உலகப் போரின்போது (1939-45), 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில், உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் நினைவுநாள் அண்மித்துவரும்வேளை, உலகில் அமைதி இயலக்கூடியதே என்பதற்கு, நாம் சாட்சிகளாய் வாழ வேண்டுமென்று, திருத்தந்தை, தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமா நகரத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு, B-29 என்ற அணுகுண்டை வீசியதில், உடனடியாக ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும், அந்நகரத்தின் 90 விழுக்காடு பகுதி அழிந்தது. பின்னர், கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதற்கு மூன்று நாள்கள் சென்று, ஆகஸ்ட் 9ம் தேதி, நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட B-29 என்ற அணுகுண்டால், ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஜப்பானின் கியோட்டோ நகரிலுள்ள Hiei மலையில் நடைபெற்றுவரும், முப்பதாவது பல்சமய செபக் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அனைத்து மதத்தினரும், அமைதிக்காகச் செபிக்கவும், ஒன்றிணைந்து உழைக்கவும், அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். Tendai புத்தமதப் பிரிவின் தலைவர் மதிப்பிற்குரிய Koei Morikawa அவர்கள் பெயருக்கு, திருத்தந்தை எழுதியிருந்த இச்செய்தியை, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும், ஹாங்காங்கின் முன்னாள் ஆயர், கர்தினால் ஜான் டாங் ஹான் அவர்கள் வாசித்தார். இந்தப் பல்சமயச் செபக் கூட்டம், ஆகஸ்ட் 6, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-05 01:53:20]


புனித ஜான் மரிய வியான்னி விட்டுச்சென்ற ஆன்மீகம்

புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் விட்டுச் சென்ற ஆன்மீகம், பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும், குறிப்பாக, குருத்துவப் பயிற்சிபெறும் இளையோரிலும், அருள்பணியாளர்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மறைமாவட்ட அருள்பணியாளர்களின் பாதுகாவலராகிய, ஆர்ஸ் நகர் புனித ஜான் மரிய வியான்னி விழாவான ஆகஸ்ட் 04, இவ்வெள்ளியன்று, ஆர்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால், பெர்னான்டோ பிலோனி அவர்கள், இப்புனிதரின் எடுத்துக்காட்டான ஆன்மீக வாழ்வு பற்றி விளக்கினார். புனித ஜான் மரிய வியான்னி, எப்போதும் கூறியதுபோன்று, நல்லவராம் கடவுள், நமக்கு ஒரு நல்ல, புனிதமான அருள்பணியாளரைக் கொடுத்துள்ளார் என்றும், இப்புனிதர், தனது மேய்ப்புப்பணி மற்றும், தன் வாழ்வால், பலரை ஆண்டவரிடம் கொண்டு வந்தார் மற்றும், ஒப்புரவாக்கினார் எனவும் கூறினார், கர்தினால், பிலோனி. பிரான்சில் புரட்சி நடந்த ஒரு கடினமான காலத்தில், இப்புனிதர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார் என்றும், இவர் நல்ல கிறிஸ்தவராக வாழ்ந்து, நல்ல கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் என்றும், கர்தினால், பிலோனி அவர்கள், மறையுரையில் கூறினார். பிரான்ஸ் நாட்டின் இலயன்சு எனும் நகருக்கு அருகிலுள்ள டார்டில்லி எனும் ஊரில் 1786ம் ஆண்டு மே 8ம் தேதி பிறந்த, புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், ஆர்ஸ் நகரில் பங்குக் குருவாகப் பணியாற்றி, 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி காலமானார். இவரிடம், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 300 பேர் வீதம் ஒப்புரவு அருளடையாளம் பெறக் காத்திருந்தனர் எனவும், இவர், ஒருநாளைக்கு, 16 முதல் 18 மணி நேரம்வரை ஒப்புரவு அருளடையாளம் வழங்கினார் எனவும் கூறப்படுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-05 01:45:04]


மன்னிப்பு மனிதர்களுக்கு எப்போதும் தேவைப்படும் ஓர் அருள்

மன்னிப்பு மனிதர்கள் அனைவருக்கும் எப்போதும் தேவைப்படும் ஓர் அருள் என்று, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார். இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில், வெனிஸ் நகரையொட்டி அமைந்துள்ள பிபியோனே (Bibione) என்ற நகரில், விண்ணேற்பு மரியா ஆலயத்தில், ஆகஸ்ட் 1 முதல் 16 முடிய நடைபெறும் மன்னிப்பு நாட்களின் துவக்கத் திருப்பலியை இச்செவ்வாய் மாலை நிகழ்த்திய கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் மறையுரையில், அசிசி நகர் மன்னிப்பு குறித்தும் பேசினார். மன்னிப்பும், இரக்கமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணியின் முக்கிய கூறுகள் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், இந்த மன்னிப்பு நாட்களில், இவ்வாலயத்தின் கதவுகளை புனிதக் கதவுகளாக திருத்தந்தை அறிவித்துள்ளதை எடுத்துரைத்தார். திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், முதல் உலகப்போரைக் கண்டனம் செய்து வெளியிட்ட மடல், 1917ம் ஆண்டு, 1ம் தேதி வெளியானதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் சாந்த்ரி அவர்கள், இம்மடல் எழுதப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவுறும் வேளையில், மன்னிப்பின்றி தவிக்கும் இவ்வுலகிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார். 'பிபியோனே மன்னிப்பு' என்ற பெயரில் ஆகஸ்ட் 1 முதல் 16ம் தேதி முடிய நடைபெறும் சிறப்பு நாள்களில், ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த விசுவாசிகள் பங்கேற்று வருகின்றனர் என்று, விண்ணேற்பு மரியா பங்குத்தள அறிக்கையொன்று கூறுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-04 00:30:23]


எதிர்நோக்கின் வாயில்கதவு, திருமுழுக்கு

ஒரு மாத விடுமுறைக்காலத்திற்குப்பின் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, இம்மாதம் 2ம் தேதி, புதனன்று மீண்டும் துவங்கியது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இம்மாதத்தின் புதன் மறைக்கல்வியுரைகள் அனைத்தும் திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுபோல், இப்புதன் மறைக்கல்வியுரைக்கு செவிமடுக்க திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் அவ்வரங்கை நிறைத்திருந்தனர். முதலில் தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலிருந்து, 'ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்', என்ற பகுதி வாசிக்கப்பட்டது. திருத்தந்தையும், இதே பகுதியை அடிப்படையாக வைத்து, 'கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற மறைக்கல்வியின் தொடர்ச்சியாக, 'எதிர்நோக்கின் வாயில் கதவு, திருமுழுக்கு' என்ற தலைப்பில் உரை வழங்கினார். கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம், திருமுழுக்கு எனும் அருளடையாளம், முடிவற்ற வாழ்வின் வாயில் கதவு என்பது குறித்து, இன்று சிந்திப்போம். ஆதிகாலத் திருஅவையில், திருமுழுக்குப் பெறுவதற்கு தயாராக இருந்தோர், தங்கள் விசுவாச அறிக்கையை கிழக்கு நோக்கி நின்று வெளியிட்டனர், அதாவது, சூரியன் உதயமாவதை இயேசுவின் அடையாளமாகக் கண்டனர். நம் இன்றைய நவீன உலகம், இந்த விண்வெளி உருவகத்தை மறந்துபோயிருந்தாலும், இந்த அடையாளம் தன் வலிமையை, தாக்கத்தை இன்னும் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர் என்பதன் அடையாளம்தான் என்ன? அதாவது, ஒருவித மூடுபனி நிலையையும் இருளையும் விரட்டியடிக்கும் ஒளியில் நம் நம்பிக்கையை வெளியிடும் கிறிஸ்தவரைக் குறித்து நிற்கிறது இது. திருமுழுக்கில் நாம் கிறிஸ்துவை அணிந்துகொள்வதன் வழியாக, ஒளியின் மக்களாக மாறுகிறோம். இந்த ஒளி, நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இந்த ஒளியே, இறைவனை நம் தந்தையாகக் கண்டுகொள்ளவும், ஏழைகளிலும் பலவீனமானவர்களிலும் இயேசுவை அடையாளம் காணவும் உதவுகிறது. நாம் திருமுழுக்குப் பெற்றபோது, பாஸ்கா மெழுகுதிரியிலிருந்து பெறப்பட்ட ஒளியில் நம் கையிலிருந்த மெழுகுதிரியை ஏற்றினோம். இது, இயேசு, மரணத்தின்மீதும், இருளின்மீதும் கொண்ட வெற்றியின் அடையாளமாக இருந்தது. புதிய ஒளியுடன் பற்றியெரியும் திருஅவை வாழ்வின் அடையாளமாகவும் இது இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம், ஒளியின் மக்களாக மறுபிறப்பு அடைந்துள்ளோம் என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டுவோம். மற்றும், நம் திருமுழுக்கின் அழைப்புக்கு விசுவாசமுள்ளவர்களாக இருந்து, இயேசு கொணரும் புதிய நம்பிக்கையை, எதிர்நோக்கைப் பகிர்வோம். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களை வழங்கியதுடன், அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-03 00:29:25]


கைம்மாறு கருதாமல் நன்மைகளை ஆற்ற திருத்தந்தை அழைப்பு

“ஒவ்வொரு நாள் வாழ்வின் சூழல்களில், பலன்களைத் தேடாமல் நன்மைகளை ஆற்றும்போது, அவை பயன் தருவதாக அமையும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆகஸ்ட்,01, இச்செவ்வாயன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின் விழாவை முன்னிட்டு, டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் நற்செயல்களை, கைம்மாறு கருதாமல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். உலக மீட்பர் துறவு சபையை ஆரம்பித்த, ஆயரான புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் 1696ம் ஆண்டு பிறந்து, 1787ம் ஆண்டு இறைபதம் அடைந்தார். மேலும், பிரேசில் நாட்டின் Paraíba ஆற்றில் அன்னை மரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டதன் 300ம் யூபிலி ஆண்டை முன்னிட்டு, அப்பரெசிதா (Aparecida) திருத்தலத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் இளையோருக்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வின் நிச்சயமற்ற நேரங்களில் அன்னை மரியாவின் பாதுகாவலை நாடுமாறு, இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 1717ம் ஆண்டு அக்டோபரில், Paraíba ஆற்றில், அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், ஐரோப்பாவில் கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜூலை மாதம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருத்தந்தையின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, ஆகஸ்ட் 02, இப்புதன்கிழமையிலிருந்து ஆரம்பமாகின்றது. இன்னும், வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் காலை திருப்பலி, வருகிற செப்டம்பர் பாதிக்குமேல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதிவரை திருத்தந்தை மேற்கொள்ளும், கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்குப் பின், சாந்தா மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலிகளை, திருத்தந்தை ஆரம்பிப்பார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-02 02:04:28]


ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளாக மாறிவருகின்றன, தீமைகள்

மனிதர்களை வியாபாரப்பொருள்களாக கடத்தும் அவல நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கவும், இத்தகைய கடத்தல்களில் ஈடுபடுவோர் மனம் திருந்தவும் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிரான நாள் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதைக் குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் மோசமான, கொடூரமான மற்றும் தண்டிக்கத்தக்க குற்றமான இந்நோய் குறித்து உலகம் அதிகக் கவலைப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, தன் கவலையை வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும், பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் குழந்தைகளும், அடிமைத் தொழில், பாலியல், உறுப்புத்திருட்டு ஆகிய கொடுமைகளுக்காகக் கடத்தப்படுகிறார்கள் என்று கூறியத் திருத்தந்தை, இவற்றை சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக்கொண்டு இவ்வுலகம் செயல்படுவது, மிகவும் கவலை தருவதாக உள்ளது என்றார். இத்தகைய நிலைகளால் பாதிக்கப்பட்டோர் விடுதலை பெறவும், கடத்தல்களில் ஈடுபடுவோர் மனம் மாறவும் அன்னை மரியை நோக்கி அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களோடு இணைந்து, இக்கருத்துக்காக, 'அருள் நிறை மரியே' என்ற செபத்தைச் செபித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-01 03:05:00]


பாசமுள்ள பார்வையில் - மணலிலும்... கல்லிலும்...

நண்பர்கள் இருவர் பாலை நிலத்தைக் கடந்து சென்றனர். வழியில் அவர்களிடையே உருவான கருத்து வேறுபாட்டால், வயதில் மூத்தவர், இளையவரை அறைந்துவிட்டார். அறைவாங்கியவர், உடனே, அங்கிருந்த மணலில், "என் நண்பன் இன்று என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினார். சிறிது தூரம் நடந்தபின், இருவரும் ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, அறைவாங்கிய இளையவர், ஒரு சுழலில் சிக்கினார். உடனே, மூத்தவர் அவரை மீட்டு, கரை சேர்த்தார். உயிர் பிழைத்த நண்பன், தன்னிடமிருந்த உளியைக் கொண்டு, அருகிலிருந்த பாறையில், "என் நண்பன் இன்று என் உயிரைக் காப்பாற்றினான்" என்று செதுக்கி வைத்தார். அறைவாங்கியதை மணலிலும், உயிர் காத்ததை கல்லிலும் எழுதக் காரணம் என்ன என்று, மூத்தவர் இளையவரிடம் கேட்டபோது, "தீமைகளை மணலில் எழுதினால், மன்னிப்பு என்ற காற்று அவற்றை மெல்ல, மெல்ல அழித்துவிடும். நன்மைகளை, கல்லில் செதுக்கினால், அவை காலமெல்லாம் வாழும்" என்று பதில் சொன்னார். "இவ்வுலகம் அனைத்தும் உன்னைவிட்டு வெளியேறும்போது, உள்ளே நுழைபவன், உண்மை நண்பன்" என்று வால்டர் வின்ச்செல் (Walter Winchell) என்பவர் கூறியுள்ளார். ஜூலை 30, இஞ்ஞாயிறு, உலகின் பல நாடுகளில் 'நட்பு நாள்' (Friendship Day) சிறப்பிக்கப்படுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-31 00:28:58]


பாசமுள்ள பார்வையில்.. மகனிடம் மன்னிப்பு கேட்ட தாய்

“மகனே, உன்னை எங்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்காக நானும், உன் அப்பாவும் மிகவும் மனம் வருந்துகின்றோம், வேதனைப்படுகின்றோம், உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றோம். மகனே, உனது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கிய நேரம் முதல், உன்னைக் காப்பாற்றுவதற்கு, எவ்வளவு முயற்சிகள் எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும், ஏறக்குறைய கடந்த 12 மாதங்களாக, எடுத்தோம். எல்லா முயற்சிகளுமே, மோசமாகவே எங்கள் வாழ்வில் நடந்தன. ஆனால், மகனே நீ எப்போதும் எங்களுக்கு மகனே. எங்களின் அழகான குட்டி மகன் இவ்வுலகைவிட்டுப் போகட்டும் எனச் சொல்வதைப் போன்ற கடினமான காரியம் வேறு எதுவும் இல்லை. நாங்கள் சொல்லவேண்டிய மிக கடினமான கூற்று இது”. இவ்வாறு, தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, பிரித்தானிய தாய் ஒருவர், அறிக்கை ஒன்றை, இவ்வாரத்தில் வெளியிட்டுள்ளார். இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டுக்கு (Charlie Gard), சிகிச்சைகள் வழங்கும் மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சையளிப்பது பலனற்றது எனக் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில், ஒரு மூன்றுமாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரிசோதனை முறையில் சிகிச்சையளிக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டு நரம்பியல் நிபுணர் ஒருவரும், குழந்தை சார்லிக்கு, பரிசோதனை முறையில் சிகிச்சையளிப்பது எவ்விதத்திலும் பயன்தாராது என அறிவித்துவிட்டார். இந்நிலையில், சார்லியின் பெற்றோர் (Chris Gard 32, Connie Yates 31), சட்டமுறைப்படி தாங்கள் எடுத்துவந்த நடவடிக்கையை, நிறுத்திக்கொள்வதாக இத்திங்களன்று அறிவித்தனர். அதன்பின் சார்லியின் அம்மா, தன் அன்பு மகனுக்குச் சொல்வதாக விடுத்த அறிக்கையில், தங்களின் இந்த முடிவுக்காக, மகனிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, உலகின் பல இடங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள், சார்லியின் பெற்றோருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-29 20:43:29]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்