வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்

பாசமுள்ள பார்வையில்.. சிக்கனத்தைக் கற்றுக்கொடுக்கும் தாய்

பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வருகின்ற யூஃப்ரோசினா என்பவரின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார்; அத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். ஆகவே தன் பிள்ளைகளுக்காக, கஷ்டப்பட்டு உழைத்து, பணம் சம்பாதித்து, படுசிக்கனமாக வாழவேண்டிய சவாலை எதிர்கொண்டார் யூஃப்ரோசினா. அப்படி சிக்கனமாகச் செலவழித்து குடும்பம் நடத்தி வரும்போது, கையிலிருக்கும் பணத்தை செலவுசெய்யும் விதம் பற்றி பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார் அத்தாய். எடுத்துக்காட்டுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்து அதை வாங்கித் தரும்படி கேட்கும்போது, அது வேண்டாம் என பட்டென்று சொல்லிவிடாமல், “உனக்கு வேண்டுமென்றால் அதை நீ வாங்கிக்கொள்ளலாம், ஆனால் நீ தீர்மானிக்க வேண்டும். நம்முடைய கையில் ஒரு பொருளை மட்டுமே வாங்குவதற்குப் பணம் இருக்கிறது. இந்தப் பணத்தில், நீ கேட்கிற பொருளை வாங்கலாம், இல்லையென்றால் இந்த வாரம், சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு கொஞ்சம் இறைச்சியோ காய்கறியோ வாங்கலாம். இப்போது சொல், உனக்கு எது வேண்டும்?” என அவர்களுக்கு நியாயத்துடன் பேசுவார். இதனால் பிள்ளைகளும், அம்மா சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு, வேறெதாவது வாங்குவதற்குப் பதிலாக, சாப்பாட்டுக்குத் தேவையானதை வாங்குகிறார்கள். பொதுவாக, பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று சொல்வது எளிது, செய்வதுதான் கஷ்டம். முக்கியமாக, அப்பா அம்மாவுடன் இருக்கிற ஒருவருக்கு பாக்கெட் மணி கிடைக்கிறதென்றால் அல்லது அவரே சம்பாதிக்கிறவராக இருந்தால் இது மிகவும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் சிக்கனமே சிறப்பு தரும்! அதை அம்மாவின் சிக்கனம் கற்றுத் தருகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-19 20:59:42]


அறிவிலிகள், இறைவார்த்தையை கேட்பதற்கு திறனற்றவர்கள்

இறைவார்த்தையைக் கேட்பதற்கு திறனற்றவர்களாகிய அறிவிலிகள், வெளித்தோற்றங்களையும், சிலைகளையும், கருத்தியல்களையும் விரும்புகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை மறையுரையாற்றினார். ஆயரும், மறைசாட்சியுமான அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியார் விழாவான இச்செவ்வாய் காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைவார்த்தையைக் கேட்பதற்குத் திறனற்ற அறிவிலிகள் பற்றிய சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாளைய திருப்பலியின் இரு வாசகங்களில், அறிவிலிகள் என்ற சொல்லாடல் இருமுறை வந்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்ன திருத்தந்தை, நற்செய்தியில் (லூக்.11: 37-41), இயேசு பரிசேயர்களையும், முதல் வாசகத்தில் பவுலடிகளார் உரோமையருக்கு எழுதிய திருமடலில் (உரோ.1:16-25), இறைப்பற்று இல்லாதவர்களையும், அறிவிலிகளே என்று சொல்கின்றனர் என்று கூறினார். இயேசு சட்ட வல்லுனர்களிடம், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளை அவர்கள் ஒத்து இருக்கின்றனர், ஏனென்றால், அவர்கள் வெளிப்புறத்தில் அழகாய் உள்ளது பற்றி மட்டும் கவலைப்பட்டு, மாசடைந்துள்ள உட்புறத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்கிறார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ். [2017-10-19 01:37:43]


அனைத்து மதத்தினரும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும்

மதத்தின் பெயரால் வன்முறைக்கு அல்லது அதனை நியாயப்படுத்துவதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்கள், அமைதியின் ஊற்றாகிய கடவுளை மிகக் கடுமையாய் புண்படுத்தும்வேளை, அனைத்து மதத்தினரும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறினார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலையில் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குமுன், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள அறையில், அமைதிக்கான மதங்களின் உலக அவையின் எண்பது பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மற்றும் ஆயுத மோதல்களால், ஏராளமான மக்கள் உருவிழந்துள்ள இன்றைய உலகில், அமைதிக்காக உழைக்க வேண்டியது, உடனடிப் பணியாக உள்ளது என்று கூறினார். அமைதி என்பது, கடவுளின் கொடையாகவும், மனிதரால் நிறைவேற்றப்பட வேண்டியதாகவும் உள்ளதால், எல்லா மதத்தினரும், அமைதிக்காகச் செபித்து, அதற்காக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நன்மனம் கொண்ட அனைத்து மனிதரும், குறிப்பாக, பொறுப்பிலுள்ளவர்கள் தங்களின் இதயங்கள், மனங்கள் மற்றும் கரங்களுடன் அமைதிக்காக உழைப்பதற்கு, தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். அமைதியை நிலைநிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில், நீதியும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, அமைதியைக் கட்டியெழுப்புவதில், மதங்கள், தங்களின் ஆன்மீக மற்றும், நன்னெறி வளங்களுடன், ஒரு குறிப்பிட்ட மற்றும் தனித்த பங்கைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். அமைதிக்கான மதங்களின் உலக அவை, மதத்திற்கும், அமைதிக்கும் ஆற்றிவரும் விலைமதிப்பற்ற சேவைக்கு, தன் பாராட்டைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதி, உடன்பிறப்பு உணர்வு, ஆயுதக்களைவு, படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் வழியாக, அமைதியை ஊக்குவிக்கும் கடமையை, மதங்கள், இயல்பிலே கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-19 01:12:04]


ஒவ்வொரு மனிதரும், பசியின்றி வாழ்வதற்கு உதவ வேண்டியது...

“ஒவ்வொரு மனிதரும், ஏழ்மை மற்றும், பசியின்றி வாழ்வதற்கு உதவ வேண்டியது மனிதக் குடும்பத்தின் கடமையாகும்” என்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 17, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டரில், உலகில் ஒவ்வொருவரும் பசியின்றி வாழ உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 1992ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஐ.நா. பொது அவை, உலக வறுமை ஒழிப்பு தினத்தை அறிவித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் 17, இச்செவ்வாயன்று இவ்வுலக தினத்தின் 25ம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது. மேலும், உலகில் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா, கடந்த ஆண்டைவிட, மூன்று இடங்கள் பின்தங்கி, நூறாவது இடத்தில் உள்ளது என்று, உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. பட்டினியால் வாடும் நாடுகள் பற்றிய குறியீட்டுப் பட்டியலை, 119 நாடுகளில் ஆய்வுசெய்த இந்நிறுவனத்தின் அறிக்கையின்படி இலங்கை 84, சீனா 29, நேபாளம் 72, மியான்மர் 77, வங்கதேசம் 88, பாகிஸ்தான் 106, ஆப்கானிஸ்தான் 107 ஆகிய இடங்களில் உள்ளன. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியா, பங்களாதேஷ், ஈராக் ஆகிய நாடுகள்கூட இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட முன்னேறி உள்ளன. ஆசிய நாடுகளின் பட்டியலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-17 23:42:20]


இலட்சக்கணக்கான சிறார் ஒரே நேரத்தில் செபமாலை பக்திமுயற்சி

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல பகுதிகளில், ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான சிறார், செபமாலை செபிக்கும் பக்திமுயற்சி ஒன்றை, Aid to the Church in Need அமைப்பு நடத்தவுள்ளது. அக்டோபர் 18, வருகிற புதன்கிழமையன்று நடைபெறும் இப்பக்திமுயற்சியில், இலட்சக்கணக்கான சிறார் கலந்துகொண்டு உலகின் அமைதிக்காகச் செபிக்கவுள்ளனர். ஆயுத மோதல்களும், அநீதிகளும் நிறைந்த இந்த உலகை மாற்றுவதற்கு, சிறாருடன் இணைந்து, எல்லாக் கத்தோலிக்கரும், உலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு, Aid to the Church in Need அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செப அமைப்பின் தலைவராகிய, கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா அவர்கள், இது பற்றிக் கூறுகையில், அமைதி எல்லா நிலைகளிலும் ஆபத்தை எதிர்கொள்கின்றது, எனவேதான் அன்னை மரியின் பாதுகாவலை இறைஞ்சுகிறோம், சிறாரின் செபம், இந்த உலகை மாற்றும் சக்தியைக் கொண்டது என்று கூறியுள்ளார். பத்து இலட்சம் சிறார் செபமாலை செபிக்கின்றனர் என்ற பெயரில், இந்தச் சிறார் செபமாலை பக்திமுயற்சியை, 2005ம் ஆண்டில், வெனெசுவேலா நாட்டின் கரகாசில், பெண்கள் ஆரம்பித்தனர். (ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2017-10-17 23:36:15]


பாசமுள்ள பார்வையில்.. சுயநலம் அகல, பொதுநலன் பெருக தாய்

கமலன் ஒரு சுயநலக்காரர். ஒரு நாள் அவர், ஊர் ஓரமாக உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்தச் சாலையின் நடுவில் ஒரு முள்செடி கொத்தாகக் கிடந்தது. கமலன், அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள்செடியைத் தாண்டி வீட்டுக்குச் சென்றார். வீட்டில் நுழைந்த கமலன், காலணிகளைக் கழற்றிக்கொண்டே, "யாராவது முள்செடி குத்தி சாகட்டும்... எனக்கென்ன வந்தது? நல்லவேளை நான் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த முணுமுணுப்பைக் கேட்ட அவரின் மனைவி கமலா, நீங்க, உங்க சுயநலக் குணத்தை விடுவதா இல்லை, நீங்க திருந்துவதற்கு ஏதாவது ஒரு காரியம் நடக்கும், பாருங்களேன் என்று சொல்லி வாய் மூடுவதற்குள், பள்ளியிலிருந்து திரும்பிய மகன் பாலு, நொண்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். உடனடியாக, கமலா, ஓடிப்போய் மகனின் காலைப் பார்த்தார். அம்மா, பள்ளியில் இருந்து நான் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்தச் சாலையில் கிடந்த முள்செடியில் தெரியாமல் கால் வைத்துவிட்டேன். அந்தச் செடியின் கூர்மையான முள்கள், “நறுக்’ என்று காலில் பாய்ந்துவிட்டன என்று சொன்னான் பாலு. மறுநாள் காலையில், பாலுவின் முள் தைத்த கால் பெரிதாக வீங்கிவிட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தான் பாலு. அவனை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினர். பாலுவின் பெற்றோர். பாலுவின் காலைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ”உங்கள் மகனின் காலில் விஷமுள் குத்தி, விஷம் பாதம்வரை பரவிவிட்டது. நகரத்துக்குப் போய் பெரிய மருத்துவரிடம் காட்டுங்கள்” என்றார் மருத்துவர். உடனே பாலுவைப் நகரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் பாலுவின் காலைப் பரிசோதித்து விட்டு, ”நல்ல வேளையாக உடனே வந்தீர்கள். சிறிது தாமதித்து வந்திருந்தாலும் பையனின் காலை எடுக்க வேண்டியிருந்திருக்கும்” என்று கூறிவிட்டுச் சிகிச்சை அளித்தார். அப்போது பாலுவின் அம்மா, தன் கணவரை முறைத்துப் பார்த்தார். சாலையின் நடுவில் கொத்தாகக் கிடந்த அந்த முள்செடியை உடனே அகற்றியிருக்கலாம் என்று நினைத்து, தன்னையே நொந்துகொண்டார் பாலுவின் அப்பா. தனது சுயநலத்தையும், தவறையும் எண்ணி மிகவும் வருந்தினார் அவர். அந்த நிகழ்வு, அந்தக் குடும்பத்தையே பொதுநலனில் மிகவும் அக்கறை கொள்ள வைத்தது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-17 00:56:17]


எல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்

உலக உணவு தினமான இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகளில், உலகில் பசியே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். “ஒவ்வொரு மனிதருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டுமென்ற உரிமையை உறுதி செய்வது, அவசரமான மற்றும் கட்டாயமாக ஆற்றப்பட வேண்டியதாகும். இதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றும், “பகிர்வதற்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது ஒரு சவாலாகும்” என்றும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் கூறுகின்றன. மேலும், தென் சூடான் நாட்டை, குறிப்பாக, அந்நாட்டில் நிலவும் கட்டுக்கடங்காத கடும் மனிதாபிமான அவசரகால நிலையை மறக்க வேண்டாம் என்று, உலக சமுதாயத்திடம் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். தென் சூடான் பற்றிய புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் நிலைபற்றி, ஏழைகளின் சார்பாக, வழக்கமாக, உலகிற்கு அறிவிப்பவர்கள் மறைப்பணியாளர்கள் என்றும், இவ்வாறு, தேவையில் இருப்போர் மத்தியில் வாழும் மறைப்பணியாளர்களின் தாராள மற்றும், உறுதியான அர்ப்பணம் பற்றி, கொம்போனி மறைப்பணியாளர் அருள்பணி Daniele Moschetti அவர்கள், இந்நூலில் எடுத்தியம்பியுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். தென் சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்களுக்கு, தீர்வு காண வேண்டியது, உலகினர் ஒவ்வொருவரின் கடமை என்றும், அந்நாட்டில் சப்தமின்றி அனுபவிக்கப்படும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை உலகில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், தனது முன்னுரையில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். “தென் சூடான் : அமைதி, நீதி மற்றும் மாண்பு பற்றிய நீண்ட மற்றும் துன்பமான பாதை (Sud Sudan: Il lungo e sofferto cammino verso pace, giustizia e dignità)” என்ற தலைப்பில், இந்நூல், இத்தாலியத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-17 00:38:01]


சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து வீரர்களுக்கு வாழ்த்து

உரோம் நகரின், 11ம் பயஸ் விளையாட்டு மையத்தில் இவ்வெள்ளியன்று ஆரம்பித்துள்ள Torneo Unified கால்பந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும், சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து வீரர்களுக்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் 350 பேருக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, முற்சார்பு எண்ணங்களுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகும், தனியாட்கள் மற்றும் மக்களின் மாண்பு மதிக்கப்படுவதற்கு, இவ்விளையாட்டு, அனைவரின் கண்களையும் இதயத்தையும் திறப்பதாய் உள்ளது என்றும் கூறினார். அறிவு குன்றிய மாற்றுத்திறனாளி வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதன் வழியாக, Unified விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு, இந்த நாள்கள் வாய்ப்பை வழங்குகின்றன எனவும், திருத்தந்தை கூறினார். விளையாட்டு, உலகளாவிய மொழி எனவும், புறக்கணிப்பு, வறுமை மற்றும் காயமுற்றுள்ள பல தனியாட்களின் வாழ்க்கையை, பிறருக்கு எடுத்துச்சொல்வதற்குத் தூண்டுதலாக, இது அமைகின்றது எனவும் திருத்தந்தை கூறினார். அக்டோபர் 13, இவ்வெள்ளி முதல், அக்டோபர் 15 வருகிற ஞாயிறு வரை, Unified கால்பந்து போட்டி உரோம் நகரில் நடைபெறுகின்றது. Knights of Columbus அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டியில், லித்துவேனியா, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, இஸ்பெயின், போர்த்துக்கல், பெல்ஜியம், ருமேனியா, இத்தாலி ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-13 20:56:29]


கத்தோலிக்க மறைக்கல்வியின் முக்கியத்துவம்

விசுவாசத்தைப் பாதுகாத்து, தன் பாதையைத் தொடர்ந்து பின்செல்லும் பண்பை, கத்தோலிக்கத் திருஅவை, இயல்பிலே கொண்டுள்ளது, இதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியிலுள்ள உண்மை, உலகம் முடிவுவரை அதன் முழுமையில் வளரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலையில் கூறினார். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி அறிவிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, திருப்பீடத்தின் புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இப்புதன் மாலையில் உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார். இயேசு கிறிஸ்து என்ற மனிதரில் புதைந்துள்ள, வற்றாத, வளமையான செல்வத்தை நம் காலத்திய மக்கள் கண்டுணர்வதற்கு, கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிழ்வோடும், இரக்கத்தின் மருந்தோடும், அவர்களை நாம் அணுக வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார். மறைக்கல்வி, திருஅவையின் வற்றாத போதனைகளை விசுவாசிகளுக்கு வழங்கும் ஒரு முக்கியமான கருவி என்றும், மறைக்கல்வியின் உதவியுடன், விசுவாசிகள், விசுவாசத்தைப் புரிந்துகொள்வதில் வளர இயலும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். தன் உரையில் மரண தண்டனைகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, மரண தண்டனை, எந்த அடிப்படையில் நிறைவேற்றப்பட்டாலும், அது மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும், இது, மனித மாண்பை தரம் தாழ்த்துகின்றது என்றும் கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-13 01:13:29]


இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு ஏற்பு

முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென ஒன்பது இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இத்திங்கள் மாலையில் திருத்தந்தையைச் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார். பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த மறைசாட்சியான அருள்பணி Tullio Maruzzo, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசி Luigi Obdulio Arroyo Navarro ஆகிய இருவரும், 1981ம் ஆண்டு ஜுலை முதல் நாளன்று, குவாத்தமாலா நாட்டின் Los Amatesல், கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர். இன்னும், பிரேசில் நாட்டின் அருள்பணி Donizetti Tavares de Lima, (1882-1961); உக்ரைன் நாட்டின் கப்புச்சின் சபையின் அருள்பணி Serafino Kaszuba (1910-1977); இஸ்பெயின் நாட்டின் இயேசு மரி யோசேப்பு சபையின் அருள்பணி Magín Morera y Feixas (1908-1984); இஸ்பெயினில் பிறந்து இத்தாலியில் காலமான நேப்பிள்ஸ் மருத்துவ சபையை ஆரம்பித்த Maria Lorenza Requenses in Longo (1463 - 1539); பிரான்ஸ் நாட்டின் Montpellierன் புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையை ஆரம்பித்த அருள்சகோதரி Francesca dello Spirito Santo (1820-1882) உக்ரைனில் பிறந்து போலந்தில் காலமான, சிலுவையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை நிறுவிய Elisabetta Rosa Czacka (1876-1961); இத்தாலியில் புனித வின்சென்ட் பிறரன்பு சபை சகோதரிகள் சபையைத் தோற்றுவித்த, பொதுநிலை விசுவாசியான Francesco Paolo Gravina (1800-1854); ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-13 01:07:10]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்