வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


பிறைபேர்க் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர் நியமனம்

2 மில்லியன் கத்தோலிக்கர்கள் வாழும் யேர்மன் பிறைபேர்க் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக கடந்த 29.06.2014 அன்று 52 வயதான ஸ்ரெபான் பேர்கர் (Stephan Burger) ஓய்வுபெற்ற பிறைபேர்க் பேராயர் சொலிற்ச் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். இத் திருப்பலியில் யேர்மன் ஆயர் மன்றத் தலைவர் கருதினால் றைன்கார்ட் மக்ஸ், திருத்தந்தையின் யேர்மன் பிரதிநிதி நிக்கொலா எற்றறோவிச் மற்றும் அயல் மறைமாவட்டங்களான மைன்ஸ், றொட்டென்பேர்க், பார்செல் ஆயர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பேராயர் தமது ஆயருக்குரிய திருவாக்காக „கிறிஸ்து இதயத்திலே“ என்பதை தெரிந்திருந்தார். இத் திருநிலைப்படுத்தல் விழாத்திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததுடன் பிறைபேர்க் பேராலயத்தின் வெளியே மக்கள் திருப்பலியைக் காண்பதற்கு வசதியாக பாரிய வீடியோ படத்திரை வைக்கப்பட்டிருந்தது. திருப்பலியின் நிறைவில் பேராயருக்கான வரவேற்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. [2014-07-04 01:00:00]


முன்னாள் யேர்மன் பிரதமர் கெல்மட் கோல் அவர்களுக்கு திருத்தந்தை விசேட வாழ்த்து

முன்னாள் யேர்மன் பிரதமர் கெல்மட் கோல் அவர்களின் 84வது பிறந்த தினமான கடந்த 03.04.14 அன்று வழமைக்கு மாறாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது விசேடமான வாழ்த்துக்களை யேர்மனில் உள்ள வத்திக்கான் திருத்தூதர் பேராயர் நிக்கொலா எற்றெறோவிச் ஊடாகத் தெரிவித்துக் கொண்டார். அவ்வேளையில் ஸ்பெறெயர் மறைமாவட்ட ஆயர் வீசெமான் அவர்களும் பேராயருடன் சென்றிருந்தார். பேராயர் எற்றெறோவிச், முன்னாள் பிரதமர் கெல்மட் கோல் அவர்கள் தமது பதவிக் காலத்தில் வத்திக்கானுடனும் உலகெங்குமுள்ள கத்தோலிக்கத் திருஅவைகளுடனும் நல்ல உறவைப் பேணியமைக்கும், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு ஏற்றவாறும், மனித மாண்புகளை மதித்தும், உலக அமைதியைக் கருத்திற்கொண்டு அரசியலை முன்னெடுத்தமைக்காக திருத்தந்தை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இதன்பின் இன்றைய உலக அரசியல் குறித்தும் முக்கியமாக உக்ரெய்ன்-ரஷ்யா முறுகல் நிலை குறித்தும் கலந்துரையாடினர். அவ்வேளையில் முன்னாள் பிரதமர் கெல்மட் கோல் அவர்கள், ஒருவர் ஒருவரை மதித்து அமைதி காக்க வேண்டிய வேளை இதுவென்றும், ரஷ்யா வரலாறு மற்றும் கலாச்சார ரீதியாக ஐரோப்பாவின் ஒரு பகுதியென்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது எனவும் குறிப்பிட்டார். [2014-04-10 01:00:00]


எசன் மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர் நியமனம்

கெல்சென்கியர்சென் பங்குகளின் குருமுதல்வர் அருட்பணி. கலாநிதி. வில்கெல்ம் சிம்மெர்மான் Propst Wilhelm Zimmermann (65) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 14.03.14 அன்று எசன் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக நியமனம் செய்துள்ளார். இவர் தமது குருத்துவத்தை 1980ல் பெற்றதுடன், அதன்பின் எசன் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் விசேடமாக முன்நாளில் எசன் தமிழ் பங்கு வழிபாடுகள் இடம்பெற்ற புனித. கேற்றூட் பங்குத் தந்தையாகவும் பணியாற்றினார். புதிய துணை ஆயருக்கு யேர்மன் தமிழ் ஆன்மீகப் பணியகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. [2014-03-15 01:00:00]


யேர்மன் ஆயர் ஒன்றியத்திற்கு புதிய முதல்வர் தெரிவு

முன்சென் மறைமாவட்டப் பேராயர் கருதினால் றைன்காட் மார்க்ஸ் (60) யேர்மன் ஆயர் ஒன்றியத்தின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 12.03.14 அன்று முன்ஸ்ரர் நகரில் இடம்பெற்ற ஆயர் ஒன்றியத்தின் அமர்வில், நான்காவது முறையாக இடம்பெற்ற வாக்களிப்பில் பேராயர் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தெரிவானார். முன்பு முதல்வராக இருந்த பிறைபேர்க் பேராயர் றொபேட் சொலிஷ் ஓய்வுபெற்ற காரணத்தினாலேயே இவரின் தெரிவு இடம்பெற்றது. ஏற்கனவே இவர் கத்தோலிக்க திருஅவையில் பல முக்கிய பதவிகளை வகித்துவருபவர், விசேடமாக திருத்தந்தைக்கு உலகத் திருஅவை விடயங்களில் ஆலோசனை கூறும் 8 கருதினால்களில் ஒருவராகவும், ஐரோப்பிய ஆயர் மன்றத்தின் தலைவராகவும் உள்ளார். 1953ல் வெஸ்ற்பாலென் கெசெக்கேயில் பிறந்த பேராயர் மார்க்ஸ், தமது இறையியற் கல்வியை படபோர்ன், பாரிஸ், முன்ஸ்ரெர் மற்றும் போகூம் நகரங்களில் பயின்றார். 1996ல் படபோர்ன் மறைமாவட்ட உதவி ஆயராகவும், ஐந்து வருடங்களின் பின்பு ரியர் மறைமாவட்ட ஆயராகவும் உயர்த்தப்பட்டார். 2008ல் முன்சென் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக மாற்றம் பெற்றார். 2010ல் திருத்தந்தை 16ம் பெனடிக்கற் இவரை கருதினாலாக நியமனம் செய்தார். [2014-03-14 01:00:00]


கேள்ன் மறைமாவட்ட பேராயர் கருதினால் மைஸ்னெர் அவர்கள் ஓய்வுபெற்றார்

தமது வயது (80) மற்றும் உடல்நிலை காரணமாக தமது பணியிலிருந்து ஓய்வு வழங்குமாறு கேள்ன் மறைமாவட்ட பேராயர் கருதினால் மைஸ்னெர் (Kardinal Joachim Meisner) அவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 28.02.14ல் ஏற்றுக்கொண்டுள்ளதாக கேள்ன் மறைமாவட்டம் அறிவித்துள்ளது. பேராயர் மைஸ்னர் தாம் ஓய்வுபெறும் செய்தியில் நான் எப்பொழுதும் எந்த இடத்திலும் நீங்கள் இறைவனில் மகிந்திருக்க விரும்பியிருந்தேன், நான் எனது பணிகளில் திடமாக இருப்பதற்கு நீங்கள் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் எனது பணி யாரையாவது திடப்படுத்தாமல் அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தால் அவர்கள் அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 2 மில்லியன் கத்தோலிக்கர்களையும் அதிக பொருளாதார வளங்களையும் கொண்ட கேள்ன் மறைமாவட்டம் தற்போது துணை ஆயர் மெல்செர் அவர்களால் பரிபாலிக்கப்படுகின்றது. இன்னும் 8 நாட்களுக்குள் மறைமாவட்ட நிர்வாகம் ஒன்றுகூடி தற்காலிக பராமரிப்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வர். அவர் புதிய பேராயர் தெரிவாகும்வரை மறைமாவட்ட நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிப்பார். ஓய்வுபெறும் கருதினால் மைஸ்னர் அவர்கள் எதிர்வரும் பங்குனி 9ல் தாம் பேராயராகிய 25 வருட வெள்ளிவிழாவைக் கொண்டாடுகின்றார். அந்த நாளிலேயே அவரது பிரியாவிடை வைபவமும் இடம்பெறவுள்ளது. [2014-03-02 01:00:00]


கருதினால்கள் பதவியேற்பில் முன்னாள் திருத்தந்தையும் பங்கேற்பு

கடந்த 22.02.2014ல் 19 ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கருதினால்களாக நியமனம் பெற்ற வேளையில் முன்னாள் திருத்தந்தையும் அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தது பலரையும ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வழிபாட்டின் ஆரம்பத்திலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவரை வாழ்த்தி வரவேற்றதுடன் கட்டியணைத்து தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். முன்னாள் திருத்தந்தைக்கு புனித பேதுரு பேராலயத்தில் விசேட இருக்கை வழங்க திருப்பீடம் முன்வந்த போதும் அவர் அதை மறுத்து உலகெங்கும் இருந்து வருகை தந்திருந்த ஏனைய கருதினால்களுடன் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். முன்னாள் திருத்தந்தை பதவி விலகியபின் வெளிப்படையாகப் பங்கேற்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்தது. [2014-02-25 01:00:00]


திருத்தந்தை புதிய கருதினால்களை நியமனம் செய்துள்ளார்.

கடந்த 12.01.14 ஞாயிறு அன்று திருத்தந்தை உலகெங்குமிருந்து 19 புதிய கருதினால்களை நியமனம் செய்துள்ளார். இவர்களுள் முன்னாள் யேர்மன்- றேகன்ஸ்பேர்க் மறைமாவட்டப் பேராயரும் தற்போது வத்திக்கான் விசுவாசப் பேராயத்தின் தலைவருமான பேராயர் ஹேர்கார்ட் லூட்விக் முல்லெர் (66) அவர்களும் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளார். இவர்களை வத்திக்கான் திருநகரில் எதிர்வரும் பெப்ரவரி 22ல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருதினால்களாக அபிசேகம் செய்து வைப்பார். இவருடன் சேர்த்து தற்போது 10 யேர்மனியர்கள் கருதினால்களாக உள்ளனர். [2014-01-16 01:00:00]


ஆயர் பீலிக்ஸ் கென் வத்திக்கான் ஆயர் பேரவையின் உறுப்பினராக நியமனம்

முன்ஸ்ரர் மறைமாவட்ட ஆயர் பீலிக்ஸ் கென் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த 16.12.2013ல் வத்திக்கான் ஆயர் பேரவையின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். இந்த ஆயர் பேரவை உலகம் முழுவதுமாக உள்ள மறைமாவட்டங்களில் ஆயர் நியமனங்களைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கேள்ன் உயர் மறைமாவட்ட கருதினால் மைஸ்னர் கடந்த 18 வருடங்களாக இந்தப் பேரவையில் உறுப்பினராக இருந்து தற்போது ஓய்வுபெறுவதால் அவரது இடத்திற்கு முன்ஸ்ரர் ஆயர் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. [2013-12-18 01:00:00]


கருதினால் மைஸ்னெர் 2.200 பீடப்பணியாளர்களுடன் வத்திக்கான் பயணம்

கடந்த 21.10.2013 அன்று கேள்ன் உயர் மறைமாவட்ட கருதினால் பேராயர் மைஸ்னெர் அவர்கள் தமது மறைமாவட்டத்தைச் சேர்ந்த 2.200 பீடப்பணியாளர்களுடன் வத்திக்கான் புனித பேதுரு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். பீடப்பணியாளர்கள் 7 நாள் திருப்பயணமாக 2 பிரத்தியேக தொடரூந்துகளிலும், பல பேரூந்தகளிலும் வத்திக்கான் வருகை தந்து, திருப்பலி வேளையில் சிவப்பு-வெள்ளை அங்கி அணிந்திருந்தது பேராலய வளாகத்தை மேலும் பக்தி மயமாக்கியது. 23.10. புதன்கிழமையன்று இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து திருத்தந்தையை சந்தித்தது சிறப்பம்சமாக அமைந்திருந்தது. இதன்போது உரையாற்றிய திருத்தந்தை திருமறைக்கு சாட்சிகளாக உங்களை வெளிக்காட்டுவதில் எவ்வித தயக்கமும் தேவையில்லை, தாழ்வுமனப்பான்மை கொள்ளாது உங்கள் இறை நம்பிக்கை குறித்து வெளிப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். [2013-10-29 08:10:49]


யேர்மன் கத்தோலிக்க ஆயர் ஒன்றியத்தின் 2012 - 2013 ஆண்டறிக்கை வெளியீடு

மூன்றாவது முறையாக யேர்மன் ஆயர் ஒன்றியம் “ யேர்மன் திருஅவையின் கணக்கெடுப்பு மற்றும் செயற்பாடுகள் 2012 - 2013“ எனும் கைநூலை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் அடங்கிய இக் கைநூலில் யேர்மன் கத்தோலிக்கர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து வருடாந்தக் கணக்கெடுப்புடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. யேர்மன் ஆயர் ஒன்றிய முதல்வர் பேராயர் சொலிற்ச் தனது முகவுரையில் இக் கைநூலில் யேர்மன் திருஅவை இந் நாட்டில் எவ்வாறு ஆழமாக நங்கூரமிட்டுள்ளது என்பதையும், இதில் அது எவ்வாறு துடிப்புடனும், ஆச்சரியத்துடனும், வியக்கத்தக்க வகையில் அது எவ்வாறு தன்னைப் பலவிதமான விடயங்களில் ஈடுபடுத்தியுள்ளதையும் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். யேர்மன் கத்தோலிக்க திருஅவையில் தற்போது 24.340.028 மக்கள் அங்கத்தவர்களாக இருப்பதுடன், இது முழுச் சனத்தொகையில் 30,3 விழுக்காடாக உள்ளது. 11.222 பங்குகளில் 9.414 அருட்பணியாளர்கள் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு உதவியாக 600.000 பொதுநிலைப் பணியாளர்கள் பங்குப் பணிகளுக்கு உதவிபுரிகின்றனர். எல்லாமாக 15.650 பாடகர் குழாம்களும் பல எண்ணிக்கையான உதவி அமைப்புகளும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் 559.526 முழுநேர ஊழியர்கள் கரிற்றாஸ், இணையத்தள ஆன்மீகப் பராமரிப்பு, விமானநிலையங்கள், வைத்தியசாலைகள், உதவி நிறுவனங்கள் அனைத்து கண்டங்களில் மக்களுக்கு உதவிபுரிவோர், ஒரு மில்லியனுக்கும் மேலான பாலர்பாடசாலைச் சிறார்கள் பராமரிப்பு மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளில் புரியும் பணிகள் குறித்து பல்வேறு கட்டுரைகள், பட்டியல்கள் மற்றும் வரைபடங்களின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. [2013-08-21 10:22:32]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்